பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்துக்கு எதிராக தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.
பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.
எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? என்பதற்கு அரசு சரியான தீர்வினைக் கண்டுகொள்ளவேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.
இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது.
தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே.
கடந்த 4 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதும் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது.
மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.



















