-வி.சரவணன்-
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக எரிப்பிற்கு சமமான ஒன்றே கிவுல் ஓயா திட்டம் எனவும் கூறினார்.
கிவுல் ஓயாத் திட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்கள், வயல் நிலங்கள், களங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டு இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே குடியேற்றப்பட்ட 4372 பெரும்பான்மையினக் குடும்பங்களும், குடியேற்றப்படவுள்ள 1626 பெரும்பான்மையினக் குடும்பங்களுமாக மொத்தம் 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக பயனடையவுள்ளதாக திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித பயன்களுமில்லை. மணலாற்றினை ஆக்கிரமித்ததோடு
நின்றுவிடாமல் அங்கு குடியேற்றப்பட்ட மற்றும் குடியேற்றப்படவிருக்கின்ற எவ்வித நிலத்தொடர்புமற்ற பெரும்பான்மையினத்தவர்களை வலுப்படுத்தும் நோக்கில் மாத்திரம் கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களை கடுமையாக எதிர்க்கின் றோம். அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை மிகமோசமான கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே காண்கின்றோம். இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினை செயற்படுத்தினால், அந்த இடங்களிலுள்ள தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையைப் பறைசாற்றும் 47 தொல்லியல் இடங்களில் பெருமளவானவை நீரில் மூழ்கடிக்கப்படும்.
ஈழத்தில் தமிழர்களின் வரலாற்று தொன்மைகளையும், ஈழத்திற்கும் தமிழர்களுக்குமிடையிலான வரலாற்றுத் தொடர்புகளையும் இல்லாமல் செய்வற்காக கடந்தகால பேரினவாத அரசாங்கமானது தமிழர்களின் வரலாற்று நூலாதாரங்களால் நிறைந்திருந்த யாழ்ப்பாணம் நூலகத்தினை எரியூட்டினார்கள்.
அதேபோல இந்த அரசு கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தி தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைகளைப் பறைசாற்றும் 47 தொல்லியல் இடங்களையும் அழிப்பதன்மூலமாக வன்னிக்கும் தமிழர்களுக்குமிடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பை அழிக்க முயல்கின்றனர்.
அம்பாந்தோட்டையிலோ மாத்தறையிலோ காணிகளை பெறுவதற்காக நாம் இங்கு போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. எமது தமிழர்களின் பூர்வீக தமிழர்தாயகத்தில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவே போராடுகின்றோம் என்றார்.


















