யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு போரட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பொறியியலாளரது கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தப் போராட்டம் தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர், ‘முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை. சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. இருப்பினும், யாழ். மாநகரின் சுகாதாரப் பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.
எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும் என வலியுருத்தப்படுகின்றது.
இதனடிப்படையில், ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகைதெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் மேற்படி போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















