-யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா-
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ள 36 கோடி ரூபாவை கடுமையான பாதிப்புக்கு முகம் கொடுத்த மலையக மக்களுக்கு கொடுங்கள் என யாழ். மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
அத்துடன், மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைப்பதாக கடும் விசனமும் வெளியிட்ட அவர். இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் பேசுகையில்,
யாழ். மாவட்த்துக்கு 36 கோடி ரூபா அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் 25000 ரூபா கொடுக்கப்படுகின்றது. முடிந்தால் அளவுக்கு தண்ணீர் வந்தவனுக்கும் அதே தொகைதான், வீடு முழுமையான மூடப்பட்டவருக்கும் அதே தொகைதான். 30 ஆம் திகதி மழை நின்ற பின்னர் 2 ஆம் திகதி இடைத்தங்கல் முகாமை அமைத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் படு மோசமான நிலைமையாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தேசிய மக்கள் சக்தியினருக்கே கொடுக்கின்றீர்கள். அந்தப்பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. அதனை மலையக மக்களுக்கு கொடுங்கள்;. நீங்கள் செய்யும் வேலைகள் வெட்கமானது. எனக்கு கொடுக்கும் கெப் வாகனத்திற்கான பணத்தை மக்களுக்கு கொடுங்கள். எனக்கு அந்த வாகனம் அவசியமில்லை.
வரவு செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் பணம் வரும்.
வெள்ளத்தில் சிக்கிய என்னை இராணுவ வீரர்களே காப்பாற்றினார்கள். மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைக்கின்றது . இது எவ்வளவு கீழ்த்தரமான வேலை. அவர்களை இராணுவ வீரர்கள் எனக் கௌரவமாக அழைக்க வேண்டும் என்றார்.


















