-த.சுபேசன்-
வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடலின் போது வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில,
வடக்கில் 80 சதவிகிதமான பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் உள நெருக்கடிகளுக்கு ஆளாகும் போது உள ஆற்றுப்படுத்தல் இல்லாமையால் தவறான முடிவுகளை எடுக்கின்றனர் என குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடைய கருத்தை ஏற்ற வடமாகாண பிரதம செயலாளர் அலுவலக அதிகாரி உடனடியாக ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் இரண்டு ஆசிரியர் என்ற அடிப்படையில் தெரிவு செய்து அவர்களுக்கு உளநல ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது உளநல ஆசிரியர்கள் கல்வி வலயத்தில் இருக்கின்றனர் எனவும் தேவைப்படும் பட்சத்தில் தேவைப்படும் பாடசாலைகளுக்குச் சென்று உள நல ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வார்கள் என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போதிலும் உளநல ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருக்க வேண்டும் .
எனவே பாடசாலைக்கு இருவர் என்ற அடிப்படையில் பயிற்சி வழங்கி அவர்களை உளநல ஆசிரியர்களாக செயற்படுத்தவும் என பிரதம செயலாளர் செயலக அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


















