முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளின் பிரசன்னத்துடன் குறித்த போராட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை இடம்பெற்றது.

கடந்த 5 ஆம் திகதி முறையற்ற வகையில் காணி ஒன்றிற்கு உரிமம் ஏற்பாடு செய்துகொடுத்ததாகக் கூறி யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்ய நுழைந்த யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம் எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக நடந்து கொண்டுள்ளனர்.
குறித்த சட்டமுரணான செயற்பாடைக் கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி திருக்குமரன்,
குறித்த போராட்டம் சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பதானதல்ல. சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
ஆனால் அந்த சட்டத்தை சரியான தேடுதல் ஆணை இல்லாது மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் குறித்த செயற்பாடு பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டையே காட்டுகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து பருத்தித்துறை சட்டத்தரணிகளும் இன்றையதினம் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கமும் இன்று திருகோமணமலை நீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
















