-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி-
-இ.கலைஅமுதன்-
பாதுகாப்பாக வடக்கு – கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை ஒழிக்கும் விதமாக தமிழ் மக்களிடம் அரசாங்கம் மாநாட்டை முன்னெடுக்கிறது. போதைப் பொருளை யாழ்ப்பாணத்திற்குள்ளும் வடக்கு மாகாணத்திற்குள்ளும் அனுமதிப்பது யார்? அரசின் கையில் தானே அதிகாரம் உள்ளது. அவர்கள் போதைப்பொருளை ஒழிக்கலாம் தானே? எதற்காக மாநாடு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிதர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பலாலியில் சுதந்திரமாக ஜனாதிபதி நடமாடுகிறார். அதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.
ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புகின்ற தமிழ் அமைப்புகள், சிவில் சமூகங்கள், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் பாதிக்க வைப்பதற்காகவா பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கிறது?
எங்களுக்கென வரலாறு ,கலாசாரம் சுயநிர்ணய உரிமை, பாரம்பரியம் என சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்காக எங்களுக்காக போராடியவர்களை நினைவு கொண்டு எங்களுடைய பல்கலைக்கழக அண்ணன்மார் முன்னெடுத்த பொங்கு தமிழ் பிரகடனமே இன்றைய அரசியல் நிலைப்பாடும் கூட.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றும் போராடி வருகிறார்கள். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அரசியல் கைதிகளை முற்று முழுதாக விடுதலை செய்வோம் என்று வந்தவர்கள் இன்றளவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை. மிக முக்கியமாக ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை யோசித்துப் பாருங்கள். நான்கு ஐந்து ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். அந்தப் பிள்ளைகளை பார்ப்பதற்கு யாருமின்றி வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலை பொழுதுபோக்கு அம்சத்திற்குள்ளும், தொலைபேசிக்குள்ளும் தொலைந்து போகும் இளைய சமுதாயத்திடம் இல்லையோ என்கிற மனவருத்தம் மிக அதிகமாக இருக்கிறது.
போதை ஒழிப்பை முன்னிட்டு ஜனாதிபதியின் பங்கேற்புடன் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால் இந்த ஜனாதிபதிக்கு ஒரு ஐந்து நிமிடங்களை ஒதுக்கி செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் எலும்பு எச்சங்களை பார்வையிடுவதற்கு முடியாதா?
போதை ஒழிப்பை முன்னெடுப்பதற்கும், முழு நாடும் ஒன்றாகுவதற்கும் அவர் அழைப்பு விடுக்கலாம். எவ்வாறு ஒன்றாக முடியும்? இது தொடர்பான வருத்தம் நம்மிடம் இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


















