யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டன.
அந்தப் படகுகள் சமாச நிர்வாகத்தினர் முன்பாக கலந்துரையாடலின் மூலம் தெரிவு செய்து வழங்கப்பட்டு வந்தன.
இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர் குற்றச்சாட்டை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மக்கள் பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தொடர்பில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரு படகுகளையும் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் ஏலத்தில் விற்று விட்டு அதன் பெறுமதியான 18 இலட்சம் ரூபாவை பக்கச்சார்பாக ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்தளித்தனர்.
இது தொடர்பாக சங்க அங்கத்தவர்கள் எங்களுக்கு அறிவிக்கவில்லை. இது மாபெரும் மோசடி. இதற்கு சமாசமும் துணை போயுள்ளது.
மீள் குடியேறிய காலத்திலிருந்து இதுவரை எமக்கு எந்த வித கொடுப்பனவும் கிடைக்கவில்லை
மக்கள் எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட படகை விற்பனை செய்துவிட்டு அதன் தொகையை ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்துள்ள நாகர்கோவில் கடற்தொழிலாளர் சங்கத்தின் மிக மோசமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்தபோது, மக்கள் போராட்டம் செய்யும் இடத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை. சந்திக்க விரும்பினால் சமாசத்தின் அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.


















