-கஜிந்தன்-
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று முன் தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றயதையடுத்து விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி இருக்கவில்லை. அதேநேரம் காயமடைந்தவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல் அம்புலன்ஸூம் இல்லை.
இந்நிலையில் அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கும் அம்புலன்ஸ் இல்லாமையால் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லை.
கிளினிக் வசதி இருந்தாலும், இரண்டு வைத்தியர்களே கடமையில் இருப்பதால் மக்கள் மாலை 5 மணிவரை காத்திருந்து சேவையை பெறவேண்டிய தேவை உள்ளது. தாதியர் இருந்தால்கூட சில சேவைகளை பெற முடியும். ஆனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு தாதியர் கூட இல்லை.
நாய்க் கடிக்கு இலக்கானவர்கள் முதலாவது ஊசியை வைத்தியசாலையில் பெற்றுவிட்டு அடுத்த ஊசிக்காக வரும்போது சங்கானை அல்லது காரைநகர் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு ஊசியை போடுவதற்கு வந்தால் கூட அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இரவு வேளையில் வைத்தியசாலைக்கு வந்தால் வைத்தியர் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் தர முடியாது என்று சொல்கிறார்கள். முhலை 6 மணிக்கு பின்னர் வைத்தியசாலை பூட்டப்பட்டிருக்கும். அவசிய சுகாதார சேவைகளை பெறுவதற்கு வரும்போது வைத்தியசாலை பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய விடயம். ஆகவே எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.


















