வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வனச்சரக அலுவலகங்கள் மற்றும் பீட் (Beat) அலுவலக அதிகாரிகளின் தினசரி களப்பணிகள் மற்றும் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 294 புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, முதற்கட்டமாக 181 வாகனங்களை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் அடையாளப்பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
16 டபுள் கெப் (Cab) வாகனங்கள் மற்றும் 165 மோட்டார் சைக்கிள்கள் உட்பட முதற்கட்டமாக 181 வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காகச் சுமார் ரூ. 2 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
யானை – மனித மோதல்கள் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதிகளிலுள்ள வனவிலங்கு காரியாலயங்களுக்கு இவ்வாகனங்கள் முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதியும் அமைச்சர் தலைமையில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்திடம் 09 டிராக்டர்கள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.




















