-நூறு வீத முன்னேற்றத்தை காண்பித்தது-
2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டம் 100 வீத முன்னேற்றத்தை காண்பித்து முதலாவது இடத்தைப் பெற்றது.
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இதனைத் தெரிவித்தார்.
பிரதேச மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பிரதேச செயலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு, பிரதேச செயலாளர்களுக்கு உறுதுணையாக செயற்பட்ட பிரதி ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் விடய உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து யாழ். மாவட்டம் முன்னிலையில் திகழ்வதற்கு பூரண ஒத்துழைப்புக்களை நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, கடற்றொழில் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில், பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் நேர்த்தியான முறையில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், அரசாங்க அதிபர் 3 தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் எனவும், அவரின் நிர்வாக செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும் 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் எமது மாவட்டம் முன்னிலைமை பெற்றதையிட்டு, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் மகிழ்ச்சி யடைவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடம் பெற்றமைக்காக அரசாங்க அதிபருக்கு ஒத்துழைப்பு நல்கிய திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது.


















