டெண்டர் பிரச்சினைகள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று (08) காலை 10.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இப்பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக இந்த அச்சுப் பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட கொள்முதல் சிக்கல்கள் காரணமாக, மே 2025 முதல் இப்பணிகள் முற்றிலும் முடங்கின.
இதனால் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட சுமார் நான்கரை இலட்சத்திற்கும் (450,000) அதிகமான இலக்கத் தகடுகள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடந்தன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இன்று முதல் இந்தத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணப்படவுள்ளது.
















