-வடமராட்சி கிழக்கில் சம்பவம்-
-கஜிந்தன்-
வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகை கொள்ளையிட்டுச் சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று அதிகாலை 1 மணியளவில் 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் மதிலால் பாய்ந்து புகுந்தனர்.
இதன்போது வீட்டில் இருந்த நபரைத் தாக்கிவிட்டு அவரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 தங்க நகையினை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர்.
இதன்போது கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில் திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பி சென்றான்.
திருடர்கள் குறித்த பெண்ணையும் கணவனையும் இரும்பு கம்பியால் தாக்கியதில் கணவன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற சமயம் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரிய போதும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து நேற்று காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு முறைப்பாடு பெற்றுக்கொள்ள வந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பான சிசிரிவி காணொளியும் தற்போது வெளிவந்துள்ளது.


















