-வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஷ்-
நல்லூர் பிரதேச வெள்ளநீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் வரக்கூடாது என்று நான் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. உண்மைக்குப் புறம்பானது என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் பிரதேச மக்கள் மறுத்துள்ளனர்.
அமைச்சரின் குற்றச்சாட்டை அடுத்து பிரதேச மக்களுடன் தவிசாளர், உப தவிசாளர் ஜனார்த்தனன், வட்டார உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட மேலும் பலர் சந்திப்பு நடத்தியதுடன் வெள்ளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ள தரப்புக்களின் நிலைமைகளை மக்களுடன் நேரில் ஆராய்ந்தனர். அதன் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் நான் வெள்ளத்தை மறித்து அணை கட்டியுள்ளதாக சாடியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காது ஒரிருவர் ஊடாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். அல்லது அரசியல் ரீதியில் என்மீது சேறுபூச முயற்சித்துள்ளார். இங்கு பிரதேச வாதங்கள் எமக்குக் கிடையாது. சிறு மண்அணை ஏற்படுத்தப்பட்டு ஒரு பகுதிக்குள் முழுமையாக வெள்ளத்தாக்கம் ஏற்படாது இரு பகுதியிடத்திலும் வெள்ளநீர் சமநிலைப்பகிர்வு ஒன்று நடந்துள்ளது.
ஏற்கனவே வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான கல்வியங்காட்டின் ஒரு பகுதிக்குள் வெள்ளத்தை விட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களை வீடுகளில் குடியிருக்க முடியாதளவுக்கு மாற்றிவிடுவது அரச கொள்கையாகவோ அறிவார்ந்த நடவடிக்கையாகவோ அமையாது.
வெள்ளநீரை தற்போது எதிர்ப்புக் கிளம்பியுள்ள பகுதிக்குள் கொண்டு வருவதற்கு ஏற்கனவே கட்டுமானம் பற்றிய பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, தாழ் நிலமாக உள்ள பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் அப்பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய் பொறிமுறைகள் தொடர்பில் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகவே காணப்பட்டது. இதனை பூர்த்தி செய்வதற்கு நாம் பலதரப்பக்களுடனும் அணுகியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















