-சி.ஜெகதீஸ்வரன்-
ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களால் நேற்றைய தினம் திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
கல்வி செயற்பாட்டுக்காக வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரை பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 26 ஆவது ஆண்டு மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்று வந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை 9மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17-11- 1999 அன்று கடலோடு சங்கமித்திருந்த, பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன், பாலகிருஸ்ணன் பிரதீபன் ஆகியோருடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்தவேளை 17.05.2004 அன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி சாவடைந்திருந்த மரியரட்ணம்-குணரட்ணம் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.
குறித்த மாணவர்களது திருவுருவப்படஙகள் வைக்கப்பட்டு இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் தம்பையா கலைச்செல்வன், மாணவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர்தூவி, சுடரேற்றி நினைவு வணக்கம் செலுத்தியிருந்தார்கள். இறுதியில் படையல் பொருட்கள் மற்றும் மாலை, பூக்கள் என்பன மாணவர்களின் ஆன்மா இரண்டறக் கலந்திருக்கும் இன்பர்சிட்டி கடலில் கலக்கப்பட்டது.


















