இந்தியா அரசாங்கம் மீது அவநம்பிக்கை எற்படுகிறது
-சொ.வர்ணன்-
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டுவது உண்மையானால் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கு இந்தியா பிண்ணிக்கக் கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்குத் தயங்குகின்றது.
இது இந்தியாவின் இயலாமையா அல்லது எம்மீதான அக்கறை இன்மையா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.
இதனால் தான் இங்குள்ள எமது மக்களும், புலம்பெயர் தமிழ் மக்களும் இந்தியா மீது ஒருவித அவநம்பிக்கையை இன்று கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை நான் இத்தருணத்தில் சொல்லவேண்டியுள்ளது.
தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கும் இன்றைய அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இன்று அவர்களுக்கு இருக்கும் அருமையான சந்தர்ப்பத்தை இந்தியா தவற விடக்கூடாது.
இந்தியா இந்த தார்மீக கடமையை செய்துதான் ஆக வேண்டும். இந்தியா மீது எனக்கு இன்னமும் இருக்கும் அளவற்ற நம்பிக்கை மற்றும் தொப்பிள்க்கொடி உறவுக்காரன் என்ற அடிப்படையிலேயே எனது இந்தக் கருத்துக்களை நான் உரிமையுடன் முன்வைக்கின்றேன்.
அதேவேளை, நாம் எமக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் சிங்கள மக்கள் மத்தியிலும், எமது நியாயம் மற்றும் வரலாறு போன்றவற்றை கொண்டுசெல்லும் அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். இது அவசியம். இதனை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முடிந்தளவுக்கு செய்திருக்கின்றேன்.
அண்மையில் நான் பல விடயங்களை சிங்கள வலைத்தளமொன்றிற்கு சிங்களத்தில் கூறி வைத்தேன். நான் சென்ற கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் என் பெயரைக் கண்டுவிட்டு ‘அண்மையில் சிங்களத்தில் செவ்வியொன்றை வழங்கியவர் நீங்கள் தானா? என்று கேட்டார்.’ ‘ஆம்’ என்றேன். அப்பொழுது அவர் ‘சேர் எங்களுக்கு எங்களைப் பற்றிய போதுமான சரித்திர அறிவு இல்லை என்று துணிந்து கூறியுள்ளீர்களே. அப்படிக் கூறக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.
தமிழ்ப் பேராசிரியர்கள் இலங்கையின் சரித்திரம் பற்றிப் பேசுவதும் சிங்கள் பேராசிரியர்கள் பேசுவதும் வெகுவாக வித்தியாசப்படுகின்றன.
இதற்குக் காரணம் மகாவம்சம். அந்நூல் ஒரு சரித்திர நூல் அல்ல. அதற்கு ஒரு சரித்திர நூல் அந்தஸ்தை சிங்களப் பேராசிரியர்கள் சிலர் கொடுக்கப் போய்த்தான் எம் நாட்டுச் சரித்திரம் திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினேன்.
சர்வதேச சரித்திர பேராசிரியர்கள், இந்திய பேராசிரியர் ஒருவர் மற்றும் நாட்டின் சிங்கள, தமிழ், இஸ்லாமிய பேராசிரியர்களும் சேர்ந்து இலங்கை பற்றிய ஒரு புதிய சரித்திர நூலை எழுத ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனிசெப் போன்ற ஏதாவது ஒரு அலகு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியுள்ளேன்.
சிங்கள, தமிழர் மத்தியில் போதிய கருத்தொருமைப்பாடு ஏற்படாததற்குக் காரணம் சரித்திர ரீதியாக எமது வரலாறு சம்பந்தமான புரிந்துணர்வு வேறு வேறு ஆதாரங்களில் இருந்து இரு தரப்பாலும் தருவிக்கப்பட்டதாலேயாகும். .
சரித்திர அறிவின் ரீதியாகத் தக்க புரிந்துணர்வு சிங்கள இளைஞர், யுவதிகளிடைய ஏற்பட்டால் நாளைய அரசியல் நிலை மாறக்கூடும்.
நாம் முதலில் எமது கட்சியை பலப்படுத்துவோம். எமது சிறப்பியல்புகளை மக்கள் அறியச் செய்வோம். அதன் பின்னர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நாம் மாகாண சபைத் தேர்தலில் யார் யார் உடன் கூட்டுச் சேர வேண்டும் என்று சிந்திப்போம்.
தற்போது யார் யாருடன் கூட்டுச் சேர்த்துள்ளோமோ அந்த உறவு தொடரட்டும். கூட்டுக்களிலும் பார்க்க எமது மக்களே எமக்கு முக்கியமானவர்கள்.
கட்சிகள் சில எந்த உண்மையும் இன்றி அவதூறுகளை உங்கள் மீது அலை அலையாக வீசுவார்கள். அவற்றைக் கண்டு தளராதீர்கள். தொடர்ந்து செயற்படுங்கள்.
உதாரணமாக, எனது மாகாணசபை காலத்தில் மத்தியில் இருந்து வட மாகாணசபைக்குக் கிடைத்த நிதியை மத்திக்குத் திருப்பி அனுப்பியதாக இன்றும் எம்மைப்பற்றி வேண்டுமென்றே குறை கூறப்படுகிறது. எனது ஐந்து வருட முதலமைச்சர் காலத்தில் ஒரு சதத்தை ஏனும் நாங்கள் வடமாகாணசபையில் இருந்து திருப்ப அனுப்பவில்லை. என்பதே உண்மை.
ஆனால் மத்தியின் அதிகாரத்திற்குட்பட்ட அப்போதைய அரசாங்க அதிபர் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிக் கையளித்தார் என்பதே உண்மையாகும். ஆனால், இந்த உண்மை தெரிந்தும் என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புகின்றார்கள்.
நான் இன்றும் இந்த தள்ளாத வயதிலும் இந்த செயற்பாடுகளுக்கு அஞ்சாமல் என்னால் முடிந்தளவுக்கு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றேன். நான் இறக்கும்வரை இதை செய்வேன்.
இளைஞர் யுவதிகளே! எமது கட்சி உங்களால் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எமது கட்சியின் யாப்பில் இதற்கேற்றவாறு அமைய சில திருத்தங்கள் கூடிய விரைவில் ஏற்படுத்தப்படும். நான் நோயுற்றிருந்ததால் என்னால் இதனை இதுவரையில் கவனிக்க முடியவில்லை.
இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் திறப்பது போன்று எல்லா மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் திறக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடன் நாம் உறவை வலுப்படுத்த முடியும். நீங்கள் அதனை செய்வீர்கள் என்று நம்புகின்றேன். எல்லாவற்றுக்கும் நிதி அவசியம். நாம் எல்லாவற்றுக்கும் புலம்பெயர் மக்களை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, எவ்வாறு நாம் எமது நாட்டிலேயே எமக்குரிய நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்ற உபாயங்களை வகுக்க வேண்டும் என்றார்.


















