பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘தொட்டலங்க கன்னா’ என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரென ‘தொட்டலங்க கன்னா’ என்பவர் 2014 டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து அவர் அப் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள ‘தொட்டலங்க கன்னா’ என்பவரை தேடி கண்டுபிடித்து கைதுசெய்து தண்டனைக்குட்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ‘தொட்டலங்க கன்னா’ என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


















