மட்டக்களப்பு – கொக்கட்டிச்சேலை பகுதியில் 5 வயதான சிறுமி ஒருவர் தாயின் காதலனால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்திரவதை செய்த தாயின் காதலன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 5 வயது சிறுமி ஒன்றுக்கு தாயான 23 வயது பெண் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கு நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அவர் குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவருடன் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதிப் பகுதியில் வைத்து குறித்த ஆண் 5 வயதுச் சிறுமிக்கு சூடு வைத்து, அடித்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து, சிறுமியின் வாய் மற்றும் கை, கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸார் ஊடாக விசாரணைக்கு வந்துள்ளது.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அடித்ததாக சிறுமி கூறியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.


















