ஆயுர்வேத மசாஜ் நிலைங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
பொலிஸ் தலைமை அதிகாரி, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் ஆயுர்வேத ஆணையாளர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் உரிமம் பெற்ற ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை (ஸ்பாக்கள்) கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு நிலையமும் தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவது 2019ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்விளைவாக நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளைத் தொடர்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸார் அவ்வப்போது தங்கள் நிலையங்களில் சோதனை நடத்தி தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதைத் தடை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பணியை விரைவுபடுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

















