-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சகல வெள்ள வாய்க்கால்களையும் விரைவில் சீர்செய்து வெள்ள அனர்த்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சபையின் தவிசாளர் பொ.குகதாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
தொழில்நுட்ப ரீதியான இழுபறி நிலைமை காரணமாக 2025 ஆம் ஆண்டிற்கான சபை நிதி வேலைகள் சில முடிவுறுத்தப்படாமல் உள்ளன. தற்போது பிரதேசத்தில் வெள்ள வாய்க்கால் சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சகல உறுப்பினர்களும் பிரதேசசபை ஊடாக ஜே.சி.பி. வாகனத்தைப் பெற்று தமது வட்டாரங்களில் உள்ள வெள்ள வாய்க்கால்களை சீர்செய்ய முடியும். சில இடங்களில் வெள்ள வாய்க்கால்கள் இயற்கையாகத் தடைப்பட்டுள்ளன. சில இடங்களில் செயற்கையாக தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்ய வேண்டும்.
அத்துடன் 2 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டத்தில் சில வீதிப் பணிகள் நிறைவுறுத்தப்படாமல் உள்ளன. அவற்றை சீர் செய்யுமாறு உரிய ஒப்பந்தகாரருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


















