அடுத்தாண்டு 1110 நியமனம் வழங்கப்படும்
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அடுத்தாண்டு 1110 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியெல்ல, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது:-
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளில் 430, மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் 2183 என்ற அடிப்படையில் மொத்தமாக 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரிகளில் 1110 குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சிப் பெறுவதுடன், இவர்கள் 2026 மாதத்துக்குள் தமது பயிற்சிக் காலத்தை நிறைவுள்ளார்கள். பயிற்சியை நிறைவு செய்தவுடன் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
அதேபோல் மேலும் 1000 பேர் கொண்ட குழுவொன்றை எதிர்காலத்தில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டுக்குள் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கும், விசேட பணிகளுக்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீருடை கொடுப்பனவுக்கு 28 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது – என்றார்.


















