மன்னார், நானாட்டான் பகுதியில் மாடுகளை திருடிய மூவரை அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்; நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டவர்கள் இரவு வேளையில் திருட்டுக்;கு வசதியாக மாடுகளை பிடித்து கட்டி பற்றைக்குள் போட்டுவிட்டு நானாட்டான், உமநகரி வீதியில் சந்தேகிக்கும் வகையில் ஆட்டோவில் சுற்றித்திரிந்துள்ளனர். இவர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலரை கண்டவுடன் தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து கிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய பாலத்தடியில் பிடித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு மற்றும் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட இரு மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமநகரி கிராமங்களை சேர்ந்த உரிமையாளர்கள் உடையது என குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் பாரிய சிரமப் பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


















