மன்னார் – நானாட்டான் பகுதியில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆவார்.
அவர் கடந்த 23 ஆம் திகதி விடுமுறையில் சென்றிருந்ததாகவும், விடுமுறையிலிருந்தபோது இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த இருவரையும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த 25 ஆம் திகதி அதிகாலை நானாட்டான் பிரதேசத்தில், மூவர் இணைந்து மாடொன்றைத் திருடி முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதைக் கண்ட பிரதேசவாசிகள் கூச்சலிட்டதால், அவர்கள் முச்சக்கர வண்டியில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த முச்சக்கர வண்டியைப் பின்தொடர்ந்துள்ளனர்.
பின்னர் முச்சக்கர வண்டியானது அங்கு கடமையிலிருந்த பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்தனர்.
இருப்பினும் முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று அடையாளம் காணப்பட்டார்.
இதன் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணைகளின்படி அந்தப் பகுதியில் வைத்து தப்பியோடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


















