எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த மக்கள் குரல் அமைப்பால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென்று அதன் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் குழு மற்றும் செயற்குழு அது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் பேரணிக்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்த நிலையில், மக்கள் குரல் அமைப்பில் அங்கத்துவம் பெறும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்றிருக்கவில்லை. இதுதொடர்பில் கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு என்று தனியான பொறிமுறை இருக்கிறது. கட்சியின் முகாமைத்துவ குழு இருக்கிறது. செயற்குழு இருக்கிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கலந்துரையாடி முற்போக்கான தீர்மானத்தை எடுப்பர் எனவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.


















