-அதனை ஒழித்துக்காட்டுவேன் : ஜனாதிபதி சபதம்-
-குற்றவாளிகள் சிலர் அரசியலுக்குள் ஊடுருவி எம்.பிக்களும் ஆகிவிட்டனர்-
-போதைப்பொருள் – குற்றக் கும்பல்களை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்-
அரசியல் பாதுகாப்பில் இருந்த போதைப்பொருள் வியாபாரிகளும் – குற்றக் கும்பல்களை சேர்ந்தவர்களும் அரசியல் கட்சிகளுக்குள் நுழைந்துள்ளனர். சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், உள்ளூராட்சி சபை தவிசாளர்களாகவும் வந்துள்ளனர். மேலும் சிலர் தனிக்கட்சிகள் ஊடாக தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முயற்சிகளை எடுத்திருக்கின்றனர்.
இவ்வாறு ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் அளவுக்கு இங்கே விதை தூவப்பட்டுள்ளது. இது மிக சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. மிக நீண்டகால அரசியல் ஆசீர்வாதம் ஊடாகவே இடம்பெற்றுள்ளது. அதனை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் தீர்க்கமான கட்டத்தை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம். மேற்கண்டவாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் குற்றக் கும்பல்களுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றுபட்டு’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், சமூக நன்மைக்காக, போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும். அது நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு. நாம் 800 – 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். கைப்பற்றப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக்கால துப்பாக்கிச்சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்து எதிர்கொள்ள முடியாது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன.
அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 ரி56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைப்பற்றப்பட்டுள்ளது. மிகுதி 38 அவர்கள் கைகளில் உள்ளன.
இராணுவ கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது? பொலிஸ், இராணுவத்தில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருகிறது.
அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப்போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது. அந்த கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும். நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது.
கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். அந்த கறுப்பு அரசாங்கத்தில் இருந்த சிலர் அரசியல் கட்சிகளுக்குள் நுழைந்துள்ளனர். சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களா, உள்ளூராட்சி சபை தவிசாளர்களை தெரிவாகியுள்ளனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர்.
ஆட்சி அதிகாரம், எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங்கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்டகாலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இது உருவானது. சிலருடைய சொத்துக்களை பார்த்தால் உழைப்பின் ஊடாக இந்தளவு சொத்துக்களை ஈட்ட முடியாது. பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுத்துள்ளனர். பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவாகும். அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு. சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும். அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது, இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது.
அது இப்போது இல்லை. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை. அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவோம். பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம் – என்றார்.


















