காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் தொடர்பான விசேட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரெஸ்னி காசிம் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் புற்றுநோயை விடவும் கொடூரமானவை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் ஒரு சிறிய காயத்தின் காரணமாகவும் கூட, பாதத்தை வெட்டி அகற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவது அரிதல்ல என்று குறிப்பிட்டார்.
அதேபோல், நீரிழிவு நோய் காரணமாக ஒரு கால் இழந்தால், அவர்களில் 30 வீதமானோருக்கு மூன்று வருடங்களுக்குள் மற்றைய காலும் இழக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
நீரிழிவு காயங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் 20 சதவீதம் ஆகும். அதாவது, நூறு பேருக்கு சர்க்கரை நோய் இருந்தால், இருபது பேருக்கு இந்தக் காயம் ஏற்படலாம். இவ்வாறான பிரச்சினை வந்தால், ஒருவரின் கால் அகற்றப்படுவது 15 மடங்கு, 30 மடங்கு அதிகம். ஆனால், இவ்வாறு அகற்றப்படும் கால்களில் 85 வீதம் முதல் 90 வீதம் வரையானவை ஒரு சிறிய பாதக் காயத்திலிருந்தே தொடங்குகின்றன.
அதற்குக் காரணங்கள் பல உள்ளன. சர்க்கரை நோயின் காரணமாக இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. நரம்புகள் சரியாகச் செயல்படாது. அதுமட்டுமல்லாமல் கல்சியம் உருவாகிறது. இலங்கையில் குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்.
வருடத்திற்கு நாற்பதாயிரம் புதிய காயங்கள் ஏற்படுகின்றன. இந்தக் கணத்திலும் கூட, ஒரு இலட்சம் பேர் நீரிழிவு காயங்களுடன் இலங்கையில் உள்ளனர் என்றார்.


















