-வலி. கிழக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம்-
நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் ஒக்ரோபர் மாத அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதில் அவசர நடவடிக்கைக்கான பிரேரணையாக சபையின் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.
கடந்த சபை அமர்வில் நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்மூலம் நிதி நிறுவனங்கள் சட்ட ஒழுங்கு வரையரைக்குப் புறம்பாக செயற்படுவது நீண்ட முயற்சியினால் மட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய நிலையில் மீளவும் கிராமங்கள் தோறும் நுண்நிதிக்கடன் வழங்குபவர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறாக ஈடுபடுவதன் வாயிலாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டின் நடைமுறையில் உள்ள நிதிசார் சட்டம் ஒழுங்குகளின் வாயிலான கடப்பாடுகளை பூர்த்திசெய்யாது அவற்றை அந்நிறுவனங்கள் மீறுகின்றன. இதனால் பெரும் இன்னல்களுக்குள் கிராமப்புறப் பெண்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
பிரதேச சபை நடைமுறையில் செயற்படும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்குள் கண்காணிக்க வேண்டும். அவற்றின் அத்துமீறல்கள் தொடர்பாக உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சபை உறுப்பினரின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















