அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத் திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
எதிர்த் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முகப்புத்தக கணக்கினூடாகவும் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
தேசிய பாதுகாப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதாகத் தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது வரையில் 101 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 60 வரையிலானவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
எமது நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் நிலவும் பிரச்சினையை ஒருபுறம் பாதாளக் குழுவினரைச் சுட்டிக்காட்டி பாதாளக் குழு செயற்பாடாகக் காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். முழு நாடகத்தையும் இவர்கள் அரங்கேற்றிவிட்டு ஊடகங்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அரசாங்கம் ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்டு புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை முழுமையாகக் கண்டிக்கிறோம்.
பாதாளக் குழுக்களை அடக்கும் விதத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்கையில் இருப்பவர்களையும் அடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் நல்லநேரத்துக்கு அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது. அது தொடர்பில் அவர் பாராளுமன்றத்துக்கு அறிவித்து சபாநாயகர் தலையிட்டிருக்காவிட்டால் ஆவணங்களைக் கைமாற்றிக்கொண்டிருந்திருப்பார்கள். அவருக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.
அவருக்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகலருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களின் முகப்புத்தக் கணக்குகளை எடுத்துக்கொண்டால் அதனூடாக பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எனவே, இந்த அடக்குமுறைக்கான வேலைத்திட்டம் அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்படுகிறதா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் கலாசாரமும் அதுவே. பாதுகாப்பை வழங்காமல் எதிர்த் தரப்பினரை மௌனிக்கச் செய்யவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிராக அதிகம் பேசினால் பாதாளக் குழுக்களினூடாக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள் என்பதிலும் எங்குளுக்கு சந்தேகம் இருக்கிறது – என்றார்.


















