மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் 95 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை அதிகாலை கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் அதிகாலை 2.30 மணியளவில் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 2050 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் வாங்கிய வியாபாரியை 5 கிராம் 450 மில்லிகிராமுடன் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியிடம் வாங்கியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உறுகாமத்திலுள்ள குறித்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டைச் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்ட நிலையில், வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியின் மேலுள்ள கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 90 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஆற்று மணல் அகழ்வுக்கு செல்வதாகவும், அங்கு கொழும்பில் இருந்து மணல் ஏற்ற வந்த மணல் லொறி சாரதியுடன் தொடர்பை பேணியுள்ளார். அச்சாரதி கொழும்பில் இருந்து இந்த போதைப்பொருளை கொண்டுவந்து இவருக்கு வழங்கியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


















