கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் – வடமாகாண ஆளுநர் என்.வேநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மத்திய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் தொடர்பிலும், அங்கு நடைபெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பிலும் வணிகர் கழகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்தபோதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என இ.போ.ச பிராந்திய முகாமையாளர் யாழ்.மாவட்ட செயலகக் கூட்டத்தில் கூறியிருந்த கருத்தை ஞாபகப்படுத்திய ஆளுநர், அதனை அப்போது செயற்படுத்தலாம் எனக் கூறினார். இதேவேளை நகரின் மத்தியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதை நடைமுறை தொடர்பில் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியபோது,
அதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக பலர் கூறியதாக ஆளுநர் கூறியுள்ளதுடன், நெடுந்தூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், வீதியின் நெருக்கடி நிலைமையை அவதானித்து நிலைமையை ஆராயலாம் எனக் குறிப்பிட்டார்.


















