2026ம் ஆண்டளவில் பார்வையிட சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் நகரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரை அழகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக யாழ். வணிகர் கழகம் ஆளுநர் என்.வேதநாயகனுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் – வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது முழுமை பெறவில்லை. அதனை முழமைப்படுத்தினால் பல கோடி ரூபாய்கள் மாநகரசபைக்கு வருமானமாகக் கிடைக்கும் என வணிகர் கழகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில் அதனை கவனத்தில் எடுத்து விரைவுபடுத்துமாறு, மாநகர முதல்வர் மற்றும் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். மேலும் நவீன சந்தை கட்டிடத்தி லுள்ள மலசலகூடங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருவது தொடர்பாக சுட்டிக்காட்டிய வணிகர் கழகத்தினர், நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைக்கவும், ஏற்கனவே உள்ள சிலைகளுக்கு, உயிரோட்டமான வர்ணங்களைப் பூசுமாறும் ஆளுநர் கூறினார். மேலும் நகரில் கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகரசபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.


















