-கஜிந்தன்-
தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, ‘துருவேறும் கைவிலங்கு’ எனும் ஆவண நூலின் அறிமுக நிகழ்வு அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பரிசில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

நூல் அறிமுக நிகழ்வில் கிடைக்கப் பெறுகின்ற ஊக்கத்தொகை முழுவதும் மீதமுள்ள சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செயற்பாட்டிற்கு உதவ வேண்டும் என்பது நூலாசிரியரின் நன் நோக்கமாக இருந்தது.
அதற்மைய, நிகழ்வரங்கில் தேறிய நிதித் தொகையை அந்த அரசியல் கைதியின் தாயாரான செல்லையா பவளவள்ளி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வருகின்ற தன்னார்வ மனிதநேய செயலமைப்பான ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர் திருமதி போ.அருள்வந்தனா ஆகியோரிடம் கையளித்துள்ளார்.
இதேபோன்று இந்நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு 2023 ஆம் ஆண்டு நோர்வே தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றிருந்தபோது கிடைக்கப் பெற்ற ஊக்கத் தொகையும் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் செயலூக்கத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















