கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதாக அளித்த வாக்குறுதியை முடிந்தால் அரசாங்கம் இன்றைய வரவு – செலவுத் திட்டத்திலிருந்தே முன்னெடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு -10ல் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட்டில் ஜனாதிபதி போதுமான அளவு கடினமாக வேலை செய்தார். இந்த முறை ஒரு திட்டமிட்ட பட்ஜெட்டை முன்வைக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது.
மேடைகளில் கூறிய மக்கள் ஆட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். எனினும், அழகான பேச்சுக்கள், வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதாக அளித்த வாக்குறுதியை முடிந்தால் இன்றைய வரவு – செலவுத் திட்டத்திலிருந்தே செய்யுங்கள்.
இம்முறை எதிர்க்கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட, மக்கள் ஆட்சியின் வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.


















