-சஜித் பிறேமதாஸவுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி-
மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க என்னால் முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
2026ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மாகாணசபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாகக் கூறமுடியாது. தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ ஊழல் மோசடியாளர்களுடன் இணையமாட்டார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் தொடர்பில் என்னால் தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொடுங்கள் என்றார்.


















