-த.சுபேசன்-
பேராசியர் துரைராஜாவின் பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு சிறகுகள் அமையம் ‘பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025’என்ற எண்ணக்கருவில் மாணவர்களுக்கு விடய ஆய்வுப் போட்டியை நடத்தவுள்ளது.
இப்போட்டியில் மாணவர்கள் தமது உண்மையான சமூகச் சூழ்நிலைகள், கல்வி, சுற்றுச்சூழல், மனித உறவுகள் சார்ந்த பிரச்சினைகளை ஆய்வு செய்து அவற்றின் காரணங்களை விளக்கி ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
ஆய்வு தொடர்பான வழிகாட்டல் சமூக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும். (விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி 21.11.2025) ஆகும்.
பேராசிரியரின் பிறந்ததினத்தை நினைவு கூர்வதுடன் அவர்தம் சிறப்பை முன்னுதாரணமாகக் கொண்டு பயணிக்கும் தலைமுறையை உருவாக்கச் செயற்படுவோம்.
பேராசிரியர் துரைராசாவின் பிறந்ததினம் (10.11.1934) ஆகும். சான்றோரைப் போற்றுவதும், கற்றோரை கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபாகும்.
எமது இளம்தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணங்களை அறிமுகப்படுத்துவது எமது கடமையாகும்.
பேராசிரியர் துரைராசா ஒரு தலைசிறந்த கல்வியாளர், உலகப்புகழ் ஈட்டிய அறிஞர், ஆறு ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் எம் மண்ணிற்கு ஆற்றிய சேவை மகத்தானது. மண்ணையும் மக்களையும் நேசித்த ஓர் உன்னதமான மனிதர் ஆவார்.
பேராசிரியரின் சிந்தனையும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுபடுத்தும் வகையிலும் இம்முறை ‘பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025’என்ற எண்ணக்கருவில் மாணவர்களிற்கான விடய ஆய்வுப் போட்டி நடைபெறவுள்ளது.
முன்உதாரணமான தலைவர்களை வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த அனைவரும் முன்வாருங்கள் என சிறகுகள் அமையம் அழைப்பு விடுத்துள்ளது.


















