-தென்னை மட்டையால் தாக்கிய தாய்மாமன் கைது-
-சி.ஜெகதீஸ்வரன்-
கோப்பாய் கிழக்குப் பகுதியில் மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலமாக ஒப்படைக்கப்பட்ட யுவதியின் சடலத்தில் பல அடிகாயங்கள் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியை தென்னை மட்டையால் பலமுறை தாக்கி காயத்தை ஏற்படுத்திய தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் கிழக்கைச் சேர்ந்த கிடைப்பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதி கடந்த ஒன்பதாம் திகதி அதிகாலை மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் வீட்டில் உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவரது சகோதரியாலும் அவரது தாய் மாமனாராலும் சடலமாக ஒப்படைக்கப்பட்டது.
இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையில் உடலில் பல இடத்தில் பலமான காயங்கள் காணப்பட்ட நிலையில் இரண்டு கால் பகுதிகளும் மோசமாக தாக்கப்பட்டு கண்டல் காயங்கள் காணப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலதிக பகுப்பாய்வுக்காக உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது மேற்படி யுவதி தாய், தந்தை அற்ற நிலையில் சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாகவும், தாய் மாமனாரால் அந்த யுவதி தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் 58 வயதுடைய தாய் மாமன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 8 ஆம் திகதி பச்சை தென்னை மட்டையினால் மட்டை தும்பாகும் வரை தாக்கியதாக அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார். இதன்படி சான்றுப் பொருளான தும்பான தென்னை மட்டையையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.


















