-க.கனகராசா-
முன்னாள் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வடமாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளருமாகிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் – யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளரும் இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வடமாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளருமாகிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன் போதான உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் இறுதிக் கிரியைகள் இன்று புதன்கிழமை அவருடைய இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
















