-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்-
-இராணுவம் – பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்-
வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் இ.சந்திரசேகர் ஆமோதித்ததுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான 4ம் நாள் விவாதம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது அமைச்சர் சந்திரசேகர், கார்த்திகை மாதம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். மாவீரர்களை நினைவுகூரும் மாதமாகும்.
தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ்க் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மக்கள் தொகை குறைந்து செல்கிறது. இலங்கையில் வறுமை கூடிய மாகாணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மாறியுள்ளன.
இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் மாறியுள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களின் பிரச்சினைகளை கடந்த கால ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை, உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. வடக்கின் இன்றைய நிலைக்கு காரணம் அதுவே.
யாழ். மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது 6 லட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது.
தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றது. அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதிலிருந்து வடக்கை மீட்கவேண்டும் என கூறியிருந்தார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு, கிழக்கில் இராணுவமே போதைப்பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப்போகிறீ;கள் என கேள்வி எழுப்பினார்.
இதன்போது மீண்டும் உரையைத் தொடர்ந்த அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், போதைப்பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது.
அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர் என்றார். இதன்போது மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செய ற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதனை மறந்துவிடக்கூடாது என்றார்.


















