-ஹேஷா விதானகே எம்.பி.-
தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியதுடன் கடந்த ஆட்சியாளர்களை போன்று நாங்கள் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டது. ஆனால் தற்போது முற்றிலும் எதிர்மறையாக செயற்படுகிறது. எவ்வித கொடுப்பனவுகளையும் பெற போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் சகல கொடுப்பனவுகளையும் இரகசியமாக பெற்றுக்கொள்கின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு அரசியலமைப்பால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் அதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மக்களை ஏமாற்றியதே தற்போது பிரச்சினையாக உள்ளது.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தெற்கில் அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் போது வடக்கில் அரசியல் இருப்பை வலுப்படுத்த தமிழ் மக்களுக்கு ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வசமிருந்த தமிழர்களின் வாக்கு வங்கிகளை கைப்பற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க கூடாது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றினார்கள். பிற்பட்ட காலத்தில் வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் குறித்து அதீத கவனம் செலுத்தவில்லை.
தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் அது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது என்றார்.


















