நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று நேற்று புதன்கிழமை பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடையில் உள்பகுதில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் தெறித்து அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு, உடனடியாக பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்த நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தால் களஞ்சிய பகுதியில் வைக்கபட்டிருந்த வெங்காயம், கோதுமை மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தீயில் கருகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


















