வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவவசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார்.
மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் 32க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. எமது இனத்திற்காக விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் பொதுமக்கள் இறந்த புனிதமான அந்த இடங்களை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கே வாழும் தமிழ் மக்களிடம் கொடுக்க வேண்டும்.
அந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கே நிலைகொண்டுள்ள இராணுவ பிரச்சனத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுயாதீனமாக அங்கே நினைவு கூரலை நடத்துவதற்கு இடத்தை கொடுக்க வேண்டும்.
அந்த இடத்தை அங்கீகரித்து பொதுமக்களுக்கு அதனைக் கொடுக்கும் போது நீங்கள் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள். அதற்கான நிதியை ஒதுக்கி அந்த புனிதமான இடத்தை பாதுகாப்போம் என்பதனை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம். இந்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.


















