-துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். அரச அதிபர் பணிப்பு-
-சொ.வர்ணன்-
யாழ். மாவட்ட விவசாயிகளுக்கென தனியான விவசாய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் யாழ.; மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தத்தின் போது இழப்பீடுகள் தொடர்பில் உரிய முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதாவது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இயற்கை இடர்கள் ஏற்பட்டாலெயே அதை அனத்தமாக பிரகடனம் செய்து இழப்பீடுகளுக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் பிரதேசம் ஒன்றில் மட்டும் இயற்கை இடரினால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது அதை அனர்த்தமாக மாவட்ட செயலகம் ஏற்றுக் கொள்வதில்லை.
குறிப்பாக வடமராட்சி பகுதியில் அண்மையில் வீசிய காற்று காரணமாக பயிர்கள் பிடுங்கப்பட்டன. ஆனால் அதை அனர்த்தமாக அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனர்த்தத்தின் போது தேசிய ரீதியாக பின்பற்றப்படும் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இழப்பீடுகள் பதிவு செய்யப்படுவது வழமை.
எனினும் பிரதேச ரீதியான பாதிப்புகள் ஏற்படும் போது இழப்பீட்டுகளை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக துறை சார்ந்த அதிகாரிகள் திட்ட வரைபு ஒன்றை தயாரித்து தாருங்கள் என அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளதுடன் அதனை கொழும்புக்கு அனுப்பி அதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.


















