-சொ.வர்ணன்-
இலங்கை கடற்றொழில் துறையின் மேம்பாடு குறித்து உலக வங்கி குழு மற்றும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் மீன்பிடி படகுகள் மீனைப் பதப்படுத்தி வைப்பதற்கு பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. படகில் குளிரூட்டும் அமைப்புகள் பெரும்பாலும் இல்லை. அதிகளவு பனிக்கட்டியை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் படகுகளின் எடை மற்றும் எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. இதனால் மீன்களின் தரம் விரைவில் குறையும் அதேவேளை, இழப்புகளும் அதிகரிக்கின்றமை உள்ளிட்ட விடயங்கள் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டன.
இந்நிலையில் 60 அடிக்குக் குறைவான பலநாள் படகுகளுக்காக சூரிய ஆற்றல் அல்லது கலப்பு முறையில் இயங்கும் கப்பலிலுள்ள குளிரூட்டும் அமைப்புகளை அறிமுகப்படுத்துதல், முக்கிய மீன்துறைமுகங்கள் மற்றும் மத்திய மீன் சந்தை ஆகிய இடங்களில் சூரிய ஆற்றல் அடிப்படையிலான குளிர்மறைகள் மற்றும் பனியாலைகளை நிறுவுதல் என யோசனைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

















