-இ.கலைஅமுதன்-
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கமைய அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களிலும் இணைக்கப்பாட்டுடன் செயற்படுவது காலத்தேவை எனக் கருதி ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் ஓர் பூர்வாங்க கலந்துரையாடலை நடாத்துவற்கு உத்தேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த கடிதத்திற்கு பதிலளித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர், உங்கள் கடிதம் குறித்து கூட்டணிக்குள் ஆராய்ந்து இயன்றளவு விரைவாக பதிலளிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


















