ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான 4ஆம் நாள் விவாதத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற கடனை 2028ஆம் ஆண்டுக்கு பின்னர் திருப்பிச் செலுத்துவதற்கு எவ்விதத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. இதனால் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பேரண்ட பொருளாதாரம் நாட்டு மக்களுக்கு பயனுடையதாக அமையும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். சமூக கட்டமைப்பில் ஏழ்மை 3 சதவீதமாகவும் தொழிலின்மை 2 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளது. ஆனால் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையவில்லை. சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.
வரி வருமானத்தினுடாக ஒரு ரில்லியன் ரூபாவை திரட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இளைஞர்களின் வாகனம் மற்றும் வீடு உட்பட அழகான வாழ்க்கையின் கனவு தான் வரியாக திரட்டப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டார்.
சர்வதேச நாணயநிதியம் விதிக்கும் சகல நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மேற்குலக நாடுகள் மத்தியில் அரசாங்கம் தலைகுனிந்து செயற்படுகிறது. இதனால் இலங்கை தனது தேசிய கௌரவத்தை இழந்துள்ளது என்றார்.


















