தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பார்க்கும் போது அதில் உள்ள யோசனைகளில் 65 வீதமானவை பொருளாதார ரீதியலானவை என்றும் சமூக நலன்புரிகள் தொடர்பில் குறைவாகவே இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாங்கள் கூறுவதாயின்,
தமிழ் மக்களின் பிரதான கட்சியான இலங்கை தமிரசுக் கட்சியானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும் என்ற விடயங்களுக்காகவே உருவானது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பிரதான கட்சியாக உள்ளது.
எமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்கும் போது தமிழ் மக்களின் இருப்புக்காகவும், அரசியல் நலனுக்காகவும் மற்றும் அரசியல் தீர்வுக்காகவுமே வாக்களிப்பர். சகல பிரஜைகளுக்கும் தமது அரசியல் உரிமை இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தை பார்க்கும் போது அதனை அவதானிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கிற்கான நிதி ஒதுக்கீட்டை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஆளுநர் வசம் இருக்கின்றன.
நீங்கள் அரசியலமைப்பு ஊடாக நீண்டகால தீர்வுத்திட்டத்திற்கு வருவதாக இருந்தால் அதுவரைக்குமான மாகாண சபைகளை நடத்திச் செல்லலாம். ஏன் அதற்கான தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்பதனை கூறியுள்ளோம். போதைப் பொருள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதவளிக்கின்றோம்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலம் அமைக்க ஆய்வு செய்கின்றது என்பதற்காக வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சியாகவும் தமிழரசு கட்சி யிருக்கிறது.இதனால் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு பயன்படுத்தப்படும்.
இதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பது தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஜனாதிபதி மீது இன்னும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அடுத்த வாரத்தில் எமது கட்சியுடன் பேசுவதற்கு எமக்கு நேரமொன்றை வழங்கியுள்ளார். எமக்கு பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. நாங்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை கொள்கின்றோம் இதனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளோம்.


















