கார்த்திகை வீரர்களுக்கு ஜே.வி.பி உண்மையான அஞ்சலியை செலுத்துவதாக இருந்தால், தாங்கள் இந்தியாவுடன் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
மாகாணசபை, அதிகாரபரவலாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.வி.பி.நாட்டுக்குள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பல இளைஞர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
ஜே.வி.பி உண்மையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக இருந்தால், ஜே .வி.பி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஜே.வி.பி அன்று, இந்தியாவுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித் தே இலங்கை -இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக போராட்டம் செய்தது. அதற்காகவே பல இளைஞர்கள் உயிர்நீத்தனர். அவ்வாறு இருக்கையில், தற்போது நீங்கள் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்போகிறீர்கள். அவ்வாறு இல்லையென்றால், இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்.
மேலும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமெரிக்காவுடன் எம்.சி,சி. ஒப்பந்தம் செய்ய முற்பட்டபோது ஜே .வி.பி.யும் பொதுஜன பெரமுனவும் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டை பிளவுபடுத்தப் போவதா க இளைஞர்களை வீதிக்கிறங்கி போராடினர். ஆனால் தற்போது அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் எம்.சி.சி. நிறுவனத்துக்கு ஏன் 100 பில்லியன் ரூபா ஒதுக்க வேண்டும்?
70 வருடங்கள் வீதிக்கிறங்கி எதிர்ப்பு தெரிவித்த விடயங்களையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனால் அரசாங்கம் 70 வருடங்களாக செய்த தவறுக்காக மன்னிப்பு கோரவேண்டும்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அவ்வாறு வழங்குவதை சட்டத்துக்கு உட்பட்டு வழங்குமாறே தெரிவிக்கிறோம். இவ்வாறு இல்லாவிட்டால், முதலாளிமார், சட்டப்பிரச்சினையை ஏற்படுத்தி, அதனை வழங்குவதை நிறுத்துவார்கள் என்றார்.


















