முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டது.
களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால் இந்த சிரமதானப் பணிகள் நடத்தப்பட்டன.
உள்நாட்டு யுத்தத்தில் தமது உயிர்களைத் துறந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் நவம்பர் 27ஆம் திகதி வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முல்லைத்தீவிலும் களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்தே சிரமதானப் பணிகள் தொடங்கின.
எதிர்வரும் 27ஆம் திகதி உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலில் அனைத்து மாவீரர்களின் பெற்றோர்களையும் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும், நடத்தப்படும் முன்னாயத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.


















