-எடுத்த இடத்தில் கொண்டு சென்று வைத்த பொலிஸ்
-நாமும் பௌத்த பேரினவாதிகளே நிரூபித்தது என்.பி.பி
-திருகோணமலையில் புத்தரால் தொடரும் பதற்றம்
திருகோணமலையில் கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரை காணியில் இருந்து நேற்ற முன்தினம் இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்ட புத்தர் சிலை, நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பொலிஸ் மற்றும் இராணுவத்தினருடைய பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், பௌத்த பிக்குகள் சகிதம், பொலிஸாராலேயே அந்தச் சிலை கொண்டுவரப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்தப் புத்தர் சிலையை மீண்டும் நிறுவுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று பாராளுமன்றத்தில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த பகுதியில் பொருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான பௌத்த பிக்குகளும் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர்.
இந்நிலையில் பௌத்த சம்பிரதாய ஏற்பாடுகளும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் மீண்டும் நிறுவப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நேற்று சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமனவுக்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இச்சம்பவம் இப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















