-திருமலை விவகாரத்தில் கொக்கரித்த சஜித்-
திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது. அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்:-
நாட்டின் அரசியலமைப்புக்கமைய பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பௌத்தசாசனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதேபோன்று மற்றைய மதங்களுக்கும் உரிய இடத்தை வழங்குவது தொடர்பிலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் 1951 ஆம் ஆண்டில் திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரை ஆரம்பிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பௌத்த நடவடிக்கைகள் திணைக்களத்தில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. புனிதபூமி உரித்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது. இதனையே பின்பற்ற வேண்டும்.
ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? அந்த புனித பூமிக்குள் பொலிஸார் நுழைந்து, புத்தர் சிலை இருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிக்கின்றனர். அதேபோன்று தாஹம் (அறநெறி) பாடசாலை கட்டடம் அமைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கு தடைகளை விதித்தல் ஆகியன தொடர்பிலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
புதின பூமிக்குள் மத நடவடிக்கை, அறநெறி பணிகளை முன்னெடுக்கும் சுதந்திரம் உள்ளது. ஏதேனும் பிரச்சினை இருப்பின் சம்பந்தப்பட்ட பௌத்த பீடங்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடி வேலைகளை செய்ய வேண்டும். அதனை விடுத்து நள்ளிரவில் பொலிஸாரை அனுப்பி விகாரையில் நடக்கும் அபிவிருத்தி பணிகளில் எவ்வாறு தலையிட முடியும்? இது யாருடைய உத்தரவு? இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவது யார்?
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று ஏற்படக்கூடிய இனவாத, மதவாத தீயை நிறுத்தி நீதி, நியாயத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


















